அரண்மனை 2 Movie Review

Aranmanai-2-poster
கோவிலூர் கிராமததில் அம்மன் கோவில் கும்பாபிஷேக சமயத்தில் ஊர்ப்பெரியவரின் (ராதாரவி) அரண்மனையில் புகும் ஆவி, அவரைத் தாக்கி கோமா நிலைக்குத் தள்ளுகிறது. இதை அறிந்து சொந்த ஊருக்கு வரும் அவரது மகன் முரளி (சித்தார்த்) வருங்கால மருமகள் (திரிஷா) அரண்மனையில் சில அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு உதவ வரும் உறவினர் ரவி (சுந்தர்..சி) அங்கு ஆவி புகுந்திருப்பதைத் தெரிந்துகொள்கிறார். ஆவி பழிவாங்கத் துடிப்பது யாரை? அதன் நோக்கம் நிறைவேறியதா? முரளியின் குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டனரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளே மீதிக் கதை.
சுந்தர்.சி படங்களுக்கு வருபவர்கள் நகைச்சுவை, செண்டிமெண்ட், கிளாமர் ஆகியவற்றை உள்ளடக்கிய அலுப்புத்தட்டாத திரைக்கதையை எதிர்பார்த்தே வருவார்கள். அந்த வகையில் ‘அரண்மனை 2’ படம் ரசிகர்களை ஓரளவு திருப்திபடுத்திகிறது.
முதல் பாதியில் திகில் தருணங்களும் நகைச்சுவைக் காட்சிகளும் மாற்றி மாற்றி வருகின்றன. இரண்டுமே பெரிய அளவில் எடுபடவில்லை. ஆவி யாருடையது என்பதற்கான சஸ்பென்ஸ், அது குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் தன் இருப்பைக் காட்டும் விதம் ஆகியவை மட்டுமே முதல் பாதியைக் காப்பாற்றுகின்றன.
இரண்டாம் பாதியில் ஆவி யார் அதன் பின்னணி என்ன என்பதோடு சாதி ஆணவக் கொலை என்ற சமகால அம்சத்தை இணைத்திருப்பது பாராட்டத்தக்கது. ஒப்பீட்டளவில் முதல் பாதியைவிட இரண்டாம் பாதி வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. மனிதர்கள் உடலில் ஆவி புகுவது. மலையாள மாந்த்ரீகம். அம்மன் சிலை. நூற்றுக் கணக்கான பேய்ப் படங்களில் பார்த்துப்  பழகிப் போன விஷயங்களைப் பொருத்துக்கொள்ளலாம்.
‘அரண்மனை 2’ படத்தின் பெரிய பலவீனம் ஹாரர் காட்சிகள் ஒன்றுகூட சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான். ரசிகர்ளை பயமுறுத்த சற்று புதுமையான விஷயங்களைப் பிடித்திருக்கலாம்.
ஹன்சிகா திரிஷா இருவரும் ஆவியாக வந்து பயமுறுத்தும் காட்சிகளுக்காக சிறப்பாக மெனக்கெட்டிருக்கிறார்கள். திரிஷா கவர்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறார். ஆவியை அழிக்கும் பொறுப்பை ஏற்று அதற்காக உயிரையே பணயம் வைக்கும் உறவினராக சுந்தர்.சி  சித்தார்த் பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் வேடமல்ல இது. பூனம் பாஜ்வா கிளாமாருக்காகவும் முதல் பாதியில் ஆவி யார் என்பதில் ரசிகர்கள் கவனத்தை திசைதிருப்பவும் பயன்பட்டிருக்கிறார். சூரி-கோவை சரளா-மனோபாலா நகைச்சுவைக் கூட்டணி இரண்டாம் பாதியில் கலகலப்பூட்டிகிறது. சூரியின் உதவியாளராக வரும் நடிகரும் ஓரளவு சிரிக்க வைக்கிறார். ராதாரவியும் சுப்பு பஞ்சுவும் குறையின்றி நடித்துவிட்டுச் செல்கிறார்கள்.
ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை தேறுகிறது,.யூ.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் என்.பி.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்துக்கு சரியாகத் துணை புரிந்திருக்கின்றன.. அந்த பிரம்மாண்ட அம்மன் சிலை மற்றும் அரண்மனை செட்டுக்காக கலை இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். கிராஃபிக்ஸ் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் கண்களை உறுத்தாமல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன.
ஹாரர் விஷயத்தில் இன்னும் மெனக்கெட்டு திரைக்கதையை செதுக்கியிருந்தால் ‘அரண்மனை 2’ சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் காமெடி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ஒரு முறை பார்க்கலாம்.
Rating : 2.5 / 5
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...