இறுதி சுற்று Movie Review

2
மேரி கோம் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெங்கலப் பதக்கம் வெல்லும் வரை நம்மில் பலருக்கு இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பெண்களுக்கான பாக்ஸிங்கும் இருப்பதே தெரியாது. இந்நிலையில் மகளிர் பாக்ஸிங்கைக் கதைக்களமாகக் கொண்டு தமிழில் ஒரு படம் எடுக்கும் அசாத்திய துணிச்சலிலேயே ஈர்த்துவிட்டார் இயக்குனர் சுதா கோங்குரா. நான்கு ஆண்டுகளுக்குப் பின் மாதவன் நடிக்கும் தமிழ்ப் படம் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்ந்துகொண்டது. படத்தின் ட்ரைலரும் அனைவரையும் ஈர்த்தது. பாசிடிவ்வான மனநிலையுடன்தான் ’இறுதி சுற்றி’ படத்தைப் பார்க்க திரையரங்குக்குள் நுழைகிறோம்.
இந்தியாவின் தலைசிறந்த பாக்ஸிங் கோச்சாக அறியப்படும் பிரபு (மாதவன்) இந்திய மகளிர் பாக்ஸிங் சங்கத்தின் உயரதிகாரிகளுக்கு அடிபணியாததால் பழிவாங்கப்பட்டவர். பொய்யான பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு ஹரியாணாவிலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார். அங்கிருந்து ஒரு பாக்ஸரை உருவாக்கிக்காட்டு என்ற சவாலுடன். சென்னையில் உள்ளூர் கோச்சாக இருக்கிறார் பாண்டி.(நாசர்). அவரிடம் பயிற்சிபெறும் லட்சுமி (மும்தாஜ் சோர்கர்) என்பவரின் தங்கை மதி (ரிதிகா சிங்) உலக சாம்பியனாகும் அளவுக்கு பாகிஸிங்கில் திறமைசாலி என்பதைக் கண்டுகொள்கிறார் பிரபு. குப்பத்தில் மீன் விற்பவரான மதியை, ஒரு நாளைக்கு ரூ.500 தருவதாகச் சொல்லி பயிற்சிக்கு வரவைக்கிறார். மதிக்கு சிறப்பாக பயிற்சி அளித்து அவரை உலக சாம்பியன் ஆக்குவதே மீதிக் கதை. இதனுடன் மதிக்கும் பிரபுவுக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவு, பிரபுவால் ஈர்க்கப்பட்டு மதி அவரைக் காதலிக்கத் தொடங்குவது, அவர்களது உறவை மற்றவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பவை போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களும் பின்னப்பட்டிருக்கிறன.
இதுவரை பாக்ஸிங் பற்றி பல படங்கள் வந்தாலும் இந்தப் படம்தான் நம் நாட்டின் தேசிய பாக்ஸிங் அமைப்பு, அதைச் சூழ்ந்திருக்கும அரசியல், போட்டிகளின் படிநிலைகள். அவற்றுக்குத் தகுதி பெறுவதற்கான பயிற்சிகள், ஆகிய விஷயங்களைப் பேசுகிறது., இதையெல்லாம் திரையில் பார்ப்பதே மிகப் புதுமையான அனுபவமாக இருக்கிறது. .இதற்கான தகவல்களை சேகரிக்க இயக்குனர் செய்திருக்கக்கூடிய அபாரமான உழைப்பு போற்றுதலுக்குரியது.
திறமையை ஓரங்கட்டிவிட்டு தங்கள் இச்சைகளுக்கு இணங்கும் பெண்களை.உயர்த்திவிடும் பாக்ஸிங்க் அதிகாரிகள். அரசு வேலைவாய்ப்புக்காகவே பாக்ஸிங் விளையாட பல பெண்கள் வருவது என பாக்ஸிங் விளையாட்டு வளராமல் இருப்பதற்கான இரு தரப்பு பிரச்சனைகளையும் பொட்டில் அடித்தாற்போல் பதிவு செய்கிறது படம். நல்ல பாக்ஸர் யார் என்பதற்கு அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கான வசனங்கள் மற்றும் காட்சிகளிலும் இயக்குனரின் உழைப்பு பளிச்சிடுகிறது. பாக்ஸிங் பயிற்சி குறித்த விவரணைகளும் விரிவாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. பாக்ஸிங் போட்டி நடக்கும் காட்சிகள் அசலாக இருக்கின்றன.
விளையாட்டு வீரர்களுக்குள் இயல்பாக ஏற்படும் போட்டி பொறாமையாக மாறி பழிவாங்கும் நிலைக்குப் போவதும் லட்சுமி பாத்திரத்தின் மூலம் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. பிரபுவின் மீதான காதலே மதி உயர்நிலைப்  போட்டிகளில் வெல்வதற்கான உந்துதலாக அமைவதை சினிமாத்தனம் இல்லாமல் மிக அழகாக சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் ஆகப் பெரிய பலம் பாத்திரப்படைப்புகள்தான்,. முதல் காட்சியிலேயே பிரபுவுக்கு பாக்ஸிங்தான் உயிர் என்பதும் எப்பேற்பட்ட மனிதரையும் அவர் துச்சமாக மதிப்பவர் என்பதும் அவரது முன்கதையும் பார்வையாளர்களுக்குப் புரியவைக்கப்படுகின்றன. அவர் மற்றவர்களை விரட்டுவதும் அதிகத் திமிர் பிடித்த மதி அவரையே வெறுப்பேற்றுவதும் கைதட்டி ரசித்துச் சிரிப்பதற்கான தருணங்கள். மதியின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பா-அம்மா, உள்ளூர் கோச் பாண்டி, பிரபுக்கு ஆதரவாக இருக்கும் பாக்ஸிங் சங்க அதிகாரி முரளிதர் (ராதாரவி) ஆகிய துணைப் பாத்திரங்களும் முழுமையாகவும் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன. செண்டிமண்ட்டைக் கசக்கிப் பிழியாமல் இவையெல்லாம் கதையில் சேர்க்கப்ப்ட்டிருக்கின்றன.
படத்தில் எங்குமே தேவையற்ற காட்சியோ வசனமோ இல்லாத சிறந்த திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் சுதாவும் சுனந்தா ரகுநந்தன் என்பவரும். பிரபு, கெங்கிஸ்கானை தனது ஆதர்சமாக விவரிக்கும் காட்சி, அவரது உத்தியைப் பயன்படுத்தி எதிரியை வீழ்த்தும் இறுதிக் காட்சி, அதை வீட்டிலிருந்து டிவியில் பார்க்கும் மதியின் பெற்றோர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், பாலியல் உறவுக்குக் கூப்பிடும் உயரதிகாரியை மதி எதிர்கொள்ளும் விதம், மதியின் மீதான அவரது அக்காவின் பொறாமை வெளிப்படும் காட்சிகள்., அதை அவர் பிரபுவிடம் வெளிப்படுத்தும் காட்சி எனப் பல்வேறு காட்சிகள் பலத்த கைதட்டல்களையும் ஆராவாரத்தையும் பெறுகின்றன. இறுதிக் காட்சிகளில் நம்மையறியாமல் கண்களில் நீர் அரும்பிவிடுகிறது. அருண் மாதேஸ்வரனின் வசனங்கள் அளவாகவும் பொருத்தமாகவும் இருப்பதோடு சரியான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பிரபுவைப் பழிவாங்கிவிட்டு அவரை ஏளனம் செய்யும் உயரதிகாரிக்கும் இரண்டே வார்த்தைகளில் பிரபு கொடுக்கும் பதிலடியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது. அந்தக் காட்சியில் தேவையற்ற பன்ச் வசனங்களை திணிக்காமல் இருந்ததே நல்ல வசனகர்த்தாவுக்கான அழகு.
இது நாயகியின் படம். ரிதிகா சிங், அறிமுக நடிகை என்று நம்ப முடியவில்லை. இத்தனை அசாத்திய நடிப்புத் திறமைகொண்ட பெண்ணை எங்கிருந்து பிடித்தார்கள் என்ற ஆச்சரியத்திலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மாஸ் ஹீரோவுக்குக் கிடைக்கக்கூடிய கைதட்டல்களையும் விசில்களையும் அள்ளுகிறார். நிஜ பாக்ஸர் என்பதால் பாக்ஸிங் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார். தமிழரல்லாத இவரது வசன உச்சரிப்பு டப்பிங்குடன் மிக அழகாகப் பொருந்துவது மிகப் பெரிய ஆறுதல்.
ஈகோ பார்க்காமல் நாயகிக்கு அதிக ஸ்கோப் உள்ள படங்களில் நடிப்பது மாதவனுக்குப் புதிதல்ல. இந்தப் படத்திலும் அப்படி நடித்திருக்கிறார். அதுவும் தனது பாத்திரத்துக்கு பில்டப் ஏற்றும் காட்சிகளையும் வசனங்களையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருந்தும் கதைக்கு என்ன தேவையே அதை மட்டுமே அனுமதித்திருக்கிறார். பல இடங்களில் பார்வையாலும் சின்னச் சின்ன உடல்மொழிகளாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். அந்த இறுதிக் காட்சியில் அதுவரை கறாரான ஆளாக இருந்துவிட்டு கண்ணீர் வருவதை கட்டுப்படுத்த முயல்வதை கண்களின் மூலம் வெளிப்படுத்தும் இடத்தில் இத்தனை காலம் எங்கய்யா இருந்தீர் என்று கேட்கத் தோன்றுகிறது.
நாசர் மற்றும் மதியின் குடிகாரத் தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார்கள். மூத்த நடிகர் நாசர் இப்படி ஒரு வேடத்தை ஏற்றிருப்பதே பாராட்டுக்குரியது. ராதாரவி தனக்குக் கிடைக்கும் ஒரு சில காட்சிகளில் தான் ஒரு தேர்ந்த  நடிகர் என்பதை நிரூபிக்கிறார். மதியின் அம்மா மற்றும் அக்காவாக நடித்திருக்கும் புதுமுக நடிகைகளும் குறையின்றி நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் ஜாகிர் உசேன் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை அபாரம். எங்கு இசை சேர்ப்புத் தேவையில்லை என்பதை நன்கு அறிந்த இசையமைப்பாளராக இருக்கிறார். பாடல்கள் தாளம் போடவைக்கின்றன. இருப்பினும் அவை வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் படத்தின் வேகத்தை மட்டுப்படுத்துவது உண்மை.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு. சதிஷ் சூர்யாவின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது.
சின்னச் சின்னக் குறைகள் இல்லாமல் இல்லை. இரண்டாம் பாதியின் நிகழ்வுகள் ஓரளவுக்கு ஊகிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.
ஆனால் இந்தச் சிறு குறைகள் எல்லாம் படம் தரும் ஒட்டுமொத்தத் திருப்தியின் முன் தூசிபோல் பறந்துவிடுகின்றன. .2016ன் சிறந்த படங்கள் பட்டியலில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டது ‘இறுதி சுற்று’.
Rating : 4.5 / 5
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...