பெங்களூர் நாட்கள் Movie Review

main2
பெங்களூர் நாட்கள்.’ பரவலான பாராட்டுகளைப் பெற்ற ’பெங்களூர் டேஸ்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக் இது. இந்த ரீமேக் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
திவ்யா (ஸ்ரீதிவ்யா), கண்ணன் (பாபி சிம்ஹா) மற்றும் அர்ஜுன் (ஆர்யா) ஒன்றாகப் பிறந்த வளர்ந்து நண்பர்களான அத்தை-மாமன் மக்கள். பிரசாத் (ராணா) என்பவரைத் திருமணம் செய்துகொள்ளும் திவ்யா பெங்களூருவில் குடியேறுகிறாள். கண்ணனுக்கும் பெங்களூருவில் ஐடி வேலைக் கிடைக்கிறது. மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் சுதந்திரப் பறவையான அர்ஜுன் அவர்களுக்காக பெங்களூருக்கு இடம் மாறுகிறான்.
திவ்யாவின் கணவன் தன் முன்னாள் காதலியின் நினைவுகளால் அவளிடம் ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறான். சிறுவயதிலேயே விவாகரத்துப் பெற்ற பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட அர்ஜுன் நல்ல குடும்பப் பின்னணி மற்றும் நிலையான வேலை இல்லாததால் சில மனக் கசப்புகளை சந்திக்கிறான். கலாச்சார வேர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கண்ணன் பெங்களூருவின் நவநாகரீக வாழ்க்கையையும் அதனால் ஏற்படும் மாற்றங்களையும் உள்வாங்க சிரமப்படுகிறான். இந்த மூவரின் பிரச்சனைகள் எப்படித் தீர்கின்றன என்பதே மீதிக் கதை.
பால் வேறுபாடு இன்றி களங்கமற்ற அன்போடு அன்யோன்யமான நண்பர்களைப் போல் பழகும் உறவினர்கள், மனைவி, மாமன் மகன்களோடு பழகுவதை விகல்பமாகப் பார்க்காத கணவன், கணவனின் முன்னாள் காதல் சார்ந்த குற்றவுணர்ச்சியை சரிசெய்ய முயற்சிக்கும் மனைவி, மனம் போன போக்கில் வாழும் இளைஞன், பைக் ரேசிங் போட்டிகள், எஃப்எம் ஆர்ஜே நாயகி (பார்வதி), நாகரிக வாழ்க்கைக்காக ஏங்கும் கிராமத்து அம்மா (சரண்யா) எனப் புதுமையான அம்சங்கள் நிறைந்திருக்கும் படம். இவற்றைத் தமிழில் கொண்டு வந்தமைக்காகவே ‘பெங்களூர் நாட்கள்’ படக் குழுவினரைப் பாராட்டலாம். அதோடு படத்தின் மேக்கிங்கிலும் பல ரசனையான அம்சங்களைப் புகுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட படத்துக்கு நடிகர்கள் மிகக் கச்சிதமாகவும் பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு சரியாகக் கடத்துபவர்களாகவும் அமைவது அவசியம். அந்த விஷயத்தில் சற்று கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவருமே மெனக்கெட்டு உழைத்து நடித்திருக்கிறார்கள். அதற்காகப் பாராட்டலாம். ஆனால் இந்தப் பாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தவில்லை. அல்லது கஷ்டப்படு பொருத்திக்கொள்ள முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்கு நடிகர்களைக் குறை சொல்வதா இயக்குனரைக் குறை சொல்வதா என்று தெரியவில்லை. சிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யாவின் குரல்களில் தெலுங்கு வாடை அடிக்கிறது.
’பாகுபலி’ வில்லனாக தமிழர்கள் மனதில் பதிந்த ராணாவுக்கு இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடம்.,உணர்வுகளை வெளிப்படுத்தாத இறுக்கமான நபராக அசத்தியிருக்கிறார். ஃப்ளாஷ்பேக் பகுதிகளில் வித்தியாசமான கெட்டப்பில் ஈர்க்கிறார். காதலியை இழந்து அழும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்ஜே சாராவாக நடித்திருக்கும் பார்வதி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்..
லட்சுமி ராய் மிக அழகாக இருப்பதோடு வரும் ஒரு சில காட்சிகளில் நடிப்பிலும் ஈர்க்கிறார். முகபாவங்களைச் சரியாக வெளிப்படுத்துகிறார் இதுவரை அன்பு மிக்க அம்மாவாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட சரண்யா இந்தப் படத்தில் வசதிகளை நாகரீக வாழ்க்கையையும் விரும்பும் அலட்டிக்கொள்ளாத அம்மாவாக ரசிக்க வைக்கிறார். நகைசுவைக்கும் பெருமளவில் பயன்பட்டிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்லும் பிரகாஷ் ராஜ் தன் நடிப்புத் திறமையை மற்றொரு முறை நிரூபிக்கிறார். அழகான கெளரவத் தோற்றத்தில் வந்து முத்திரை பதித்துச் செல்கிறார் சமந்தா.
படத்தின் நீளம் மற்றுமொரு குறை. இரண்டாம் பாதி மிக மெதுவாக நகர்கிறது. சில காட்சிகள் அளவுக்கதிகமாக நீள்வதாகத் தோன்றும் உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. படத்தொகுப்பாளர் சற்று கவனித்திருக்கலாம்.
கோபி சுந்தரின் பாடல்கள் கேட்க இதமாக இருக்கின்றன. பாடல்கள் பெருமளவில் கதை நகர்வுக்குப் பயன்படுத்தியிருப்பது அழகு. பின்னணி இசை குறை சொல்லும்படி இல்லை. கே.வி.குகனின் ஒளிப்பதிவு பெங்களூருவையும் கோவை மாவட்ட கிராமத்தையும் கண்ணுக்கு விருந்தாக்குகிறது.
இந்தக் குறைகளை மீறி உறவுகளையும் நட்பையும் புதுமையான விதத்திலொ காண்பிக்கும் இந்தப் படத்தை ஒரு முறை ரசித்துப் பார்க்கலாம்.
Rating : 3 /5
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...