விசாரணை Movie Review

வெற்றிமாறன் இயக்கியிருக்கும் மூன்றாவது படமான ‘விசாரணை’ உள்ளுரில் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவிட்டது. காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நாயகன்-நாயகி-வில்லன் என்ற வழக்கமான பாத்திரப் படைப்பு என வெகுஜன சினிமாவில் எதிர்பார்க்கப்படும் கேளிக்கை அம்சங்கள் எதுவும் இல்லை. ஆனால் இது சாதாரண ரசிகர்கள் முதல் தீவிர விமர்சகர்கள், கலைஞர்கள் வரை அனைவரையும் ஈர்க்கக் கூடிய படம்.  வணிகப் படம், கலைப் படம் ஆகிய வேறுபாடுகளைத் தகர்த்தெறிந்துள்ள, படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கொண்டாடப்பட வேண்டிய படம்.Visaranai-Movie-stills-and-Poster
பாண்டி (தினேஷ்) மற்றும் அவனது மூன்று நண்பர்கள் (அடுகளம் முருகதாஸ் மற்றும் இரண்டு அறிமுக நடிகர்கள்) ஆந்திர மாநிலம் குண்டூரில் சிறு வேலைகள் பார்க்கும் அனாதைத் தமிழர்கள். அவர்களைக் காவல்துறை கைது செய்கிறது செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்யப்பட்டு  நீதிமன்றத்தின் முன் நிற்கவைக்கப்படுகிறார்கள். ஒரு பணக்காரக் குற்றவாளி கே.கே.(கிஷொர்) என்பவனைப் பிடிக்க நீதிமன்றத்துக்கு வரும் தமிழக காவல்துறை அதிகாரி முத்துவேலின் (சமுத்திரக்கனி) உதவியால் விடுதலையாகி சென்னைக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
நால்வரில் ஒருவர் வழியில் இறங்கிக்கொள்ள மற்ற மூவர் முத்துவேலுக்கு பதில் உதவி செய்யப்போய் உயிரைப் பறிக்கும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த மூன்று அப்பாவிகள் என ஆனார்கள் என்பதே மீதிக் கதை.
படத்தின் முதல் ஷாட்டிலிருந்து கதை தொடங்குகிறது. மையப் பாத்திரங்களின் பின்னணி வள வள வசனங்கள் மூலமாக அல்லாமல் பெருமளவில் காட்சிகளின் மூலமாக விவரிக்கப்படுகின்றன. இரண்டாவது அல்லது மூன்றாவது காட்சியில், மையச் சிக்கலுக்குள் நுழைந்துவிடுகிறது திரைக்கதை. கதாபாத்திரங்களை பின்னணியுடன் பதிவு செய்யவே முதல் பாதியின் பெரும்பாலான பகுதியை எடுத்துக்கொள்ளும் திரைப்படங்களுக்கு மத்தியில் இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்.
ஒரு படம் முதல் பாதி இரண்டாம் பாதி என்று பிரிக்கப்படுவது திரையரங்குகள் மற்றும் அவற்றில் படம் பார்ப்பவர்களின் நடைமுறைத் தேவைகளுக்காகத்தான் என்றாலும் இந்தப் படத்தில் அந்தப் பிரிவு சற்று அதிக முக்கியத்துவம் பெறுகிறது. முதல் பாதியில் ஆந்திர காவல்நிலையத்தில் அப்பாவிகளை குற்றவாளிகளாக மாற்ற நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் அழுத்தமாகவும் வலுவாகவும் பதிவு செய்யப்படுகின்றன. இரண்டாம் பாதியில் கதை, தமிழக காவல் நிலையத்துக்கு இடம்பெயர்கிறது.
ஒரு காவல்நிலையத்தில் நடக்கும் குற்ற விசாரணை, அதில் சம்பந்தப்பட பல்வேறு அடுக்ககளில் உள்ள காவலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் மறைமுகத் தலையீடு, அதனால் நிகழும் குற்றம் அதை மறைக்க நடக்கும் சதி அந்த சதியில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞர்கள் என்ற பரபரப்பாக நகரும் திரைக்கதை, நம் சமூக அமைப்பு தொடர்பான பல்வேறு அதிர்ச்சிதரும் உண்மைகளைப் போட்டுடைக்கிறது.
ஆந்திர, தமிழக காவல்துறையினரால் குற்ற விசாரணையில் நடத்தப்படும் இந்த இரண்டு விதிமீறல்களுமே சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களை அச்சுறுத்துபவை. ஓரளவு வசதியாக வாழ்பவர்கள் கவனிக்க விரும்பாத உண்மைகள் இவை. அனால் இந்த சமூக அமைப்பில் அதிகாரவர்க்கத்தினரும் அதிக வசதி படைத்தவர்களும் தங்களுக்கு கீழ் இருப்பவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும், அதற்கு யார் வேண்டுமானாலும் இரையாகலாம்.என்ற உண்மையை அழுத்திச் சொல்கிறது படம்.
மேம்போக்காகப் பார்த்தால் காவல்துறையினரை குற்றவாளிகளாக சித்தரிப்பதாகத் தோன்றினாலும் அவர்களும் வசதி படைத்தவர்களின், பேராசைக்கான கருவிதான் என்பதும் படத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  இந்த உண்மைகளைப் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருப்பதாலேயே மிக முக்கியமான திரைப்படம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது ‘விசாரணை’.
தங்கள் சுயநலங்களுக்காக குற்றங்களை நிகழ்த்தும் அதிகாரவர்க்கத்தினர் அல்லது வசதி படைத்தவர்கள் யார் என்று படத்தில் காட்டப்படவேயில்லை. நிஜத்திலும் எங்கோ உயரத்தில் இருந்துகொண்டு நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் பேராசைப் பருந்துகளால்தானே நாம் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்?.
இத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசும் படம் மிக சீரியஸான அனைத்து தரப்பினராலும் பார்க்க முடியாத படமாக இருக்குமோ என்ற பயம் கொள்ளத் தேவையில்லை. இது அனைவருமே பார்க்கத்தக்க படம் பார்க்க வேண்டிய படம்.
பாதிக்கப்படுபவர்களின் சோகத்தைச் சொல்ல அழுதுவடியும் மெலோடிராமா காட்சிகளோ வசனங்களோ அறவே இல்லை. சிறிய காட்சிகள் மற்றும் சுருக்கமான ஆனால் நறுக்கென்ற வசனங்களின் மூலம் அவை சரியாகப் பதிவுசெய்யப்பட்டுவிடுகின்றன. வன்முறை இருக்கிறது. ஆனால் கதைக்குத் தேவையான அளவைவிட இம்மியளவும் அதிகரிக்கவில்லை. படத்தில் இருக்கும் அடிதடிக் காட்சிகள் அடிவாங்குபவரின் வலியை பார்வையாளருக்கு கடத்த மட்டுமே பயன்படுகின்றன. தேவையற்ற அதிர்ச்சி மதிப்பைத் தருவதற்காக அல்ல.
படத்தில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை. யதார்த்தமான ஓரளவு ஊகிக்கக்கூடிய அளவில்தான் படம் நகர்கிறது. ஆனால் ஒரு நிமிடம்கூட தொய்வடையாமல் சீரான வேகத்தில் பயணிக்கும் திரைக்கதை படம் நெடுக பார்வையாளரின் கவனத்தையும் தக்கவைக்கிறது. அடுத்து என்ன என்ற பதைபதைப்பு கடைசிவரை நீடிக்கிறது. இந்த அப்பாவி மனிதர்கள் தப்பிவிட மாட்டார்களா என்ற ஏக்கம் தொற்றிக்கொள்கிறது.
படத்தில் அழகான அளவான காதலும் இருக்கிறது. கதையுடன் இழையோடும் நகைச்சுவையும் இருக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதை, பரபரப்பான இறுதிக் காட்சி ஆகியவையும் சரியாக அமைந்திருக்கின்றன.
இந்தக் காட்சி , இந்த வசனம் என்று குறிப்பிட்டு பாராட்ட முடியாத அளவு அனைத்துக் காட்சிகளும் வசனங்களும் திரைக்கதையில் சரியான பங்காற்றுகின்றன. பொருட்படுத்ததக்க பெரிய குறைகள் எதுவும் இல்லை.
மையப் பாத்திரமேற்றிருக்கும் தினேஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்த இளம் வயதில் அடுத்தடுத்து கனமான பாத்திரங்கள் கிடைப்பதும், அவற்றில் இவர் சிறப்பாக நடிப்பதும் அரிய சாதனை. முருகதாஸ் நகைச்சுவைக்கும் சோகத்துக்கும் சமமான அளவில் நன்கு பயன்பட்டிருக்கிறார். சமுத்திரக்கனி பல்வேறு வகையான உணர்சிகளை வெளிப்படுத்த வேண்டிய பாத்திரத்தில் அநாயசமாக நடித்து கைத்தட்டல்களை அள்ளுகிறார். கிஷோர் ஒரு கட்டம்வரை வழக்கம்போல் மிடுக்கும் எள்ளலும் கொண்டவராகவும் அதற்குப் பின் பாதிக்கப்பட்டு அச்சத்தை வெளிப்படுத்துபவராகவும் இரண்டு விதமான நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார். ஆனந்தி மிகச் சில காட்சிகளில் வந்தாலும் தெலுங்கு பேசும் வீட்டு வேலைக்காரப் பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறார். நல்லவர்போல் பேசி நயவஞ்சகமாக ஏமாற்றுபவராக நடித்திருக்கும் ராமதாஸ் பிரமாதமாக நடித்திருக்கிறார். அனுபவமிக்க இடைநிலைக் காவலாளி வேடத்துக்குக் கச்சிதமான தேர்வு.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை தேவையான இடத்தில் மட்டும் ஒலித்து சரியான தாக்கத்தை ஏற்படுத்தப் பயன்பட்டிருக்கிறது.
சரியான ஒளியமைப்பு மற்றும் கோணங்களுடன் பார்வையாளர்கள் கதைக் களத்தில் இருக்கும்.உணர்வை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ராமலிங்கம். (மறைந்த) கிஷோரின்  நேர்த்தியான படத்தொகுப்பு கதை நகர்வுக்கு சிறப்பாகப் பங்காற்றுகிறது. காவல்நிலையங்கள் உண்மைக்கு நெருக்கமாகப் பதிவாகியிருப்பதில் கலை இயக்குனர் ஜாக்கியின் கவனமும் உழைப்பும் தெரிகிறது.
மொத்தத்தில் ’விசாரணை’ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளைச் சொல்லும் படம். நாம் அனைவரும் பார்க்கத்தக்க பார்க்க வேண்டிய படம்.
Rating: 4.5 / 5.0
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...